Home இலங்கை செய்திகள் கொழும்பு செய்திகள் தடுப்பில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும் - அப்பாத்துரை விநாயகமூர்த்தி!
தடுப்பில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும் - அப்பாத்துரை விநாயகமூர்த்தி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 05 மே 2010 02:07

Appathurai_Vinayagamoorthy1அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டி, தடுப்புக் காவலில் - சிறைச்சாலைகளில் இருக்கின்ற சகல தமிழ் கைதிகளும் மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசர காலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

14 உறுப்பினர்களைக் கொண்டு வடக்குக் கிழக்குத் தமிழர்களின் குரலாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்த அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றது. ஒரு நாட்டில் அவசர கால நிலை காணப்படும் பொழுது மட்டுமே அவசர கால விதிகள் பிரகடனம் செய்யப்படும். அதன்படி இந்த அவசர கால ஒழுங்கு விதிகள் தற்போது தேவையற்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசர கால ஒழுங்கு விதிகள் போன்ற விசேட சட்டங்கள் படையினருக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளதுடன் அதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் வலுவாக இடம்பெறுகின்றன.

சட்டத்திற்கு முரணான கைதுகள், ஆட்கடலத்தல்கள், கப்பம் கோருதல், கொள்ளைச் சம்பவங்கள், அநீதியான கொலைகள் ஆகியன இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தொடராக இடம்பெற்றுவரும் கடத்தல்கள், கொலைகள், கற்பழிப்புச் சம்பவங்கள் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினாலேயே நடாத்தப்படுகின்றன என்ற பயங்கர உணர்வு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

பொலிசாருடைய அறிக்கையை பொறுத்தவரையில் கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள், ஒரு கற்பழிப்புச் சம்பவம் மற்றும் இரண்டு கடத்தல் முயற்சிகள் என்பன இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த மார்ச் மாத முற்பகுதியில் க.பொ.த (சா.த) மாணவன் கபில்நாத் கடத்தப்பட்டு அவன் விடுதலைக்காக மூன்று கோடி ரூபா கப்பமாகக் கோரப்பட்ட போது அவனது பெற்றோர் நிராகரித்த போது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான்.

இந்தவாரம் மோட்டார் பொறியியலாளரான பி.மகேஸ்வரன், இலத்திரனியல் பொறியியலாளரான எஸ்.மகேந்திரன் ஆகியோர் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டு முறையே ரூபா ஐந்து மில்லியன், ரூபா இரண்டு மில்லியன் கப்பம் கோரப்பட்ட நிலையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட, உறவினரால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையால் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டு யாழ். நகரிற்கு அண்மையில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் இம் மாத முற்பகுதியில் இடம்பெயர்ந்து மானிப்பாயில் தனது உறவினர் வீட்டிற்கு வந்த இளம் பெண் பிள்ளை ஒருவர் குழுவாக வந்த முரடர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கோண்டாவிலில் மோட்டார் வண்டியில் வந்த இருவர் ஒரு இளம் பெண் பிள்ளையைக் கட்டிப்பிடித்துக் கடத்த முற்பட்ட போது அயலவர்கள் தலையிட்டதால் அம் முயற்சி முறியடிக்கப்பட்டு அவர்கள் தப்பி ஓடியிருந்தனர்.

இச் சம்பவங்கள் தொடர்பில் மன்னாள் இராணுவத்தினர் இதன் பின்னணியில் இருக்கலாம் எனப் பொலிசார் விசாரணைகளின் போது சந்தேகிப்பதாகத் தெரியவருகின்றது.

மேலும் 13 வயது நிரம்பிய ரி. அஜித்குமார் என்பவர் மானிப்பாய் முகாமிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது கறுப்பு வான் வண்டியில் வந்தவர்களால் கடத்தப்பட்டுப் பின்னர் அவனது சத்தமிட்ட அழுகையால் விடுவிக்கப்பட்டான்.

தும்பளை வாசியாகிய சிவலிங்கம் சதீசன் 02.05.2010 இல் நெல்லியடியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அநீதியாக இடம்பெறும் கொலைகள் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை மலிந்துவிட்டன என்றே கூற வேண்டும் என்பதுடன் அங்கு நடைமுறையில் இருப்பது இராணுவ ஆட்;சியே தவிர சிவில் நிர்வாகம் அல்ல என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன். இக் கொடுஞ்செயல்கள் யாவும் அவசர கால ஒழுங்கு விதிகளின் பலாபலன்களாகவே இடம்பெறுகின்றன என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

மனித உரிமைகள் முன்னேற்ற நிலையத்தில் திட்ட முகாமையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஸ்ரீபன் சுந்தரராஸ் என்பவர் 07.05.2009 அன்று இராணுவ உடை தரித்து வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். அன்றைய தினம் நீதவான் நீதிமன்ற வழக்கு இல. எம்.சி.பி 330:9 இன் கட்டளைப்படி விடுவிக்கப்பட்டிருந்தார்.

அன்றைய தினம் மாலை தனது குடும்பத்தினருடன் தனது காரில் சென்று கொண்டிருந்த பொழுது கொள்ளுப்பிட்டி வரை பின் தொடர்ந்து மோட்டார் வண்டியில் வந்த இருவர் மாலை 6.00 மணயளவில் நகர மண்டப சந்தியைத் தாண்டி மகளிர் கல்லூரியை அண்மித்த நிலையில் மோட்டார் வண்டிகளால் அவரது கார் முடக்கப்பட்டு இன்னுமொரு வெள்ளைவானில் வந்த இராணுவ உடை அணிந்த அல்லது 5 பேர் கொண்ட குழுவினரால் பலவந்தமாக வெளியே இழுத்தெடுக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டார். இதுவரைக்கும் அவரது தங்குமிடம் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை.

இங்கு குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயம் மேற்படி கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கொகன ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகராலய உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றிய அலுவலகர்களுடனான சந்திப்பின் போது மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்ததுடன் கடத்தப்படவில்லை என்றும் அவர் அரச கட்டுப்பாட்டிற்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் இடம் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இன்றுவரை அந் நபரிற்கு என்ன நடந்தது என்பது யாரிற்கும் தெரியாது. விசேட சட்டங்களாகிய பயங்கரவாத தடைச் சட்டம், அவரச கால ஒழுங்கு விதிகள் ஆகியவற்றால் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன. எல்லை கடந்த அதிகாரங்கள் பொலிசார், இராணுவத்தினரால் துர்ஷ்பிரயோகம் செய்யப்படுவதுடன் அவர் பணம் சம்பாதிப்பதற்கே இவை வழி செய்கின்றன. என்றும் அப்பாத்துரை விநாயக மூர்த்தி தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை, 05 மே 2010 02:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது