| இமை விருது வழங்கும் நிகழ்வு சிறப்புற நடந்தேறியது! |
|
|
|
| திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012 05:57 |
|
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிறு(05.02.2012) பிற்பகல் 2.30 மணிக்கு திரு.சுந்தரம் டிவகலாலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகப் பேராசிரியர் அன்ரனி நோர்பேட்டும், சிறப்பு விருந்தினராக திரு.சுரேஷ் பிறேமச்சந்திரனும் கலந்து கொண்டனர். இமை நிறுவனம் நடாத்திய சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் கூடுதலான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் பசுமை அமைதி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செல்வன்.செங்கதிர்ச்செல்வன் சேந்தன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார். இப்பதக்கம் சூழலியலாளர் அமரர்.க.சி.குகதாசன் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது. வடமராட்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கோகிலா சிவகுமார், கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. யசிந்தா கந்தசாமி, வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. விதுஷா மோகனராஜன் ஆகியோர் இரண்டாம் இடங்களைப் பெற்று வெள்ளிப் பதக்கங்களையும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி. பவித்திரா கணேஸ்வரநாதன், சாவக்கச்சேரி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கம்ஷனா ஜெயசுதன் ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற இந்த ஆறு மாணவர்களுக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கூடுதலான மதிப்பெண்களைப் பெற்ற ஏனைய மாணவர்களுக்குப் பசுமை அமைதிச் சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இயற்கை பண்பாட்டு மரபு வளப்பாதுகாப்பு மையத்தின் செயலாளர் இரு மகேசன் கஜேந்திரன் வரவேற்புரையும், தலைவர் பொ.ஐங்கரநேசன் தொடக்க உரையையும் ஆற்றினர். மேலும், விருந்தினர்களாக வைத்தியகலாநிதி திருமதி அன்ரனி நோர்பேட், வைத்திய கலாநிதி யமுனாநந்தா, திருமதி.அன்னலட்சுமி குதாசன் ஆகியோரும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அரங்கு கொள்ளாத அளவுக்குப் பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|