| "பெரிய தம்பனைக் கிராமம்" (பார்வை) - கேசவன். |
|
|
|
| வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 23:57 |
|
பெரியதம்பனை கிராமம் பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம் போல் வாழ்ந்துவருகின்றனர். இக்கிராமமானது 1948ஆம் ஆண்டு நெடுந்தீவிலிருந்து புறப்பட்டுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முருகப்பிள்ளை மருதலிங்கம், சபாபதி, இராமநாதர் சகோதரர்களால் தம்பனைக்குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடுவெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது. 1955இல் அரசாங்கம் 114 கொலனி வீட்டுத்திட்டத்தினை வழங்கியபோதும் இங்கு 30 குடும்பங்கள் மாத்திரமே குடியேறியது. 1956இல் நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடிதீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் குடியேறியபொழுதிலும் நெடுந்தீவு மக்களே இங்கு தொடர்ந்தும் வசிக்கத் தொடங்கினர். 114குடும்பங்களுடன் தொடங்கிய இந்தக்கிராமம் 1990களில் 630 குடும்பங்களாகப் பெருகிற்று. விவசாயத்தினைப் பிரதான ஜீவனோபாயமாகக் கொண்ட இக்கிரமத்தின் பிரதான குளமான தம்பனைக் குளம் 1957ஆம் ஆண்டின் பெருவெள்ளத்திற்குப் பிறகு கரைகள் உயர்த்தப்பட்டு திருத்தியமைக்கப்பட்டது. இக்கிராமத்தின் நீர் ஆதாரமாக புளியடிமுறிப்பு, வேலங்குளம், கோலமோட்டைக்குளம் என்னும் குளங்களும் உள்ளன. மக்களின் விழிப்புணர்ச்சியின் காரணமாக இக்கிராமம் 1957ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தினின்று தப்பிப்பிழைத்தது. 1983ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இம்மக்கள் பலமுறை இடப்பெயர்வுகளை மேற்கொண்டு மடுக்கோயில் தஞ்சமடைந்துள்ளனர். அவ்வப்பொழுது விவசாயம் செய்துவந்துள்ளபோதிலும் தொடர்ந்து இக்கிராமத்தில் தங்கியிருந்து தங்களது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கு இம்மக்களால் இயலவில்லை. 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட சமாதான உடனப்படிக்கையின் பின்னரும்கூட யாரும் இங்கு குடியேற முன்வரவில்லை. 06.08.2007ஆம் ஆண்டு முதல் இக்கிராமம் அரச கட்டுப்பாட்டின்கீழ் வந்தபோதும் மோதல்களும் இடம்பெற்றன. இத்தருணத்தில் 114 கொலனிவீடுகள் உட்பட ஏனைய வீடுகள், பெரிய தம்பனை மகாவித்தியாலயம், அம்மன்கோயில், இரண்டு பிள்ளையார்கோயில்கள், அந்தோனியார் தேவாலயம் முதலானவைகள் விமானக் குண்டுவீச்சாலும் nஷல்தாக்குதலினாலும் நேரடிச்சமரினால் துப்பாக்கிரவைகளாலும் துளைக்கப்பட்டு தரைமட்டமாயின. இச்சம்பவங்களின்போது இம்மக்களின் 12உழவியந்திரங்கள், லாண்ட்மாஸ்டர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நீரிறைக்கும் பம்பிகள், 5அருவிவெட்டு இயந்திரங்கள், 3 சூடடிக்கும் இயந்திரங்கள் மற்றும் கைத்தெளிகருவிகள் உள்ளிட்ட பல இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான விவசாய உபகரணங்கள் அழிந்தும் தொலைந்தும் விடுபட்டும் போயிருப்பது கிராமமக்களுடன் கலந்துரையாடியதிலிருந்து தெரியவருகின்றது. மேலும் இவ்வூர் மக்கள் திரட்டிய நிதியிலிருந்து உருவாக்கப்பட்ட சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பிள்ளையார் சிலையும் கோயில் மணியும் களவாடப்பட்டுள்ளமை இம்மக்களை உணர்வுபூர்வமாக மிகவும் பாதித்துள்ளது. சுமார் 400 மாணவர்கள்வரை கல்விபயின்றுவந்த பெரியதம்பனை மகாவித்தியாலய கட்டடம் சின்னாபின்னமாகியுள்ளதோடு தளபாடங்கள், கணனியறையின் குளிருட்டிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் யாவும் மண்ணோடு மண்ணாகியுள்ளன. தற்போது 11ஆசிரியர்களுடன் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதாகவும் பாடசாலையின் அதிபர் திருமதி. த.நாகலிங்கம் கூறினார். அடுத்த தவணையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் படிப்படியாக அடுத்த கல்வியாண்டில் பாடசாலை பழைய நிலையையும் தாண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அதிபர் கூறினார். தற்பொழுது இப்பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள கூடாரத்தில் இயங்கி வருகின்றது. பாடசாலையில்கூட கூரைகள் இல்லாத நிலையில் வருகின்ற மாரிக்காலத்தில் இங்கு கல்வி பயில்கின்ற மாணவர்கள் மற்றும் கூடாரங்களில் வாழுகின்ற கிராம மக்கள் ஆகியோரின் நிலையை எண்ணி உடனடியாக அரசாங்கம் முன்னேற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். நாங்கள் நின்றிருந்த வேளையில் பாடசாலைக்குத் தற்காலிக கூரைகள் அமைப்பதற்கான தளபாடங்கள் வந்திறங்கின. பாடசாலை, மற்றும் கிராமத்தின் ஒரு பகுதியை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பார்வையிட்டார். அப்பொழுது பிரதேச சபையால் படங்குகளால் கட்டப்பட்ட பாடசாலையின் மலசலக்கூடங்களைப் பார்வையிட்ட அவர் இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார். பாடசாலையைச் சுற்றி வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பாடசாலையின் அதிபர் வேண்டுகோள் விடுத்தார். பாடசாலையின் கட்டடம் திருத்த முடியாத அளவிற்குச் சேதமுற்றிருப்பதுடன் கதிரை மேசை போன்ற தளபாடங்களும் பாவனைக்குதவாதவையாகவே உள்ளன. சுமார் மூவாயிரம் வரையான தென்னைகள், கிட்டத்தட்ட இதேயளவிலான பனைகள், மா, மற்றும் பயன் தரும் மரங்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் வீடுதோறும் இருந்த கிணறுகள் கட்டு இடிக்கப்பட்டு தூர்க்கப்பட்டுவிட்டதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். ஆறாயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இடம்பெயர்ந்தும் காணாமல் போயுள்ளதுடன் இறந்துமுள்ளன. பெரியதம்பனை கிராமம் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் கேந்திரப்பிரதேசமாக விளங்குவதால் இப்பகுதியைத் தக்கவைத்துக்கொள்ள யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்பினருமே முனைப்புக் காட்டினர். இதனால் இக்கிராமத்தில் நீண்டகாலம் சமர் தொடர்ந்தது. ஒட்டுமொத்தத்தில் இக்கிராமம் இரண்டாம் உலகப்போரில் சிதிலமடைந்த ஐரோப்பிய கிராமங்களில் ஒன்றுபோல் பயங்கரமாகக் காட்சியளிக்கின்றது. நீண்டகாலத்திற்குப் பிறகு இப்பொழுது மீள்குடியேறியுள்ள மக்கள் இன்னமும் தமது உழைக்கும் முயற்சிகளைக் கைவிட்டுவிடவில்லை என்பது அவர்களின் பேச்சிலிருந்து தெளிவாகியது. தமது காணிகளை அடைப்பதற்கு முட்கம்பி, கட்டைகள் வழங்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வயலுக்கும் ஷதொட்டி| கட்டப்படவேண்டும் என்றும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுத்தனர். ஒரு உழவியந்திரத்தைக் கொண்டு வரப்பிட்டு பெரும்போக விவசாயத்தை மேற்கொள்வதற்கு வழிகாண வேண்டும் என்றும் மக்கள் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கைவிடுத்தனர். விளைச்சல் காலத்தில் காட்டுப்பன்றி, யானை போன்ற காட்டுவிலங்குகளின் தொல்லைகள் இருப்பதால் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்கு ஏற்கனவே nஷhட்கன் பாவிப்பதற்கு உரிமம் பெற்றுள்ள 15 பேருக்கும் அதனைப் பாவிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 420ஏக்கருக்கான நீர்ப்பாசனத்தை வழங்கும் தம்பனைக்குளத்தின் அணைக்கட்டு உயர்த்தப்பட்டு 2கிமீ நீளமான வாய்க்கால் துப்புரவு செய்து சீமெந்துப் பூச்சிடவேண்டும் என்றும் மக்கள் கேட்டுக்கொண்டனர். இதனைப்போன்றே 200ஏக்கருக்கு நீர்வழங்கும் புளியடி முறிப்புக்குளமும் சீரமைக்கப்பட்டு 2கிமீ தூரத்திற்கு வாய்க்கால் புனரமைக்கப்பட வேண்டியுள்ளது. 200ஏக்கர் வயல்காணி நிலக்கண்ணிவெடி அகற்றி துப்புரவு செய்யப்படுவதுடன் சிறிய குளங்களான வேலங்குளம், கோலமோட்டைக்குளம் ஆகியவை தூர்வாரித் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கிராமத்தின் அனைத்து வீதிகளும் திருத்தியமைக்கப்பட்டு புதிய தார்ச்சாலைகள் அமைத்துக்கொடுக்க வேண்டும், மின்சார இணைப்புப் பெற்றுக்கொடுக்க வேண்டும் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு கிணற்றின் கட்டுக்கள் புனரமைக்கப்பட வேண்டும். என்றும் பாதுகாப்பு அரணுக்காகப் போடப்பட்ட மண்பண்டுகளை அகற்ற வேண்டும், இரண்டு வீடுகளில் முகாமிட்டுள்ள பாதுகாப்புப் படையினர் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கைவிடுத்தனர். பெரிய தம்பனையில் தையல் பயிற்சி முடித்துள்ள சுமார் 10 யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி அவர்களது சுயவேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இக்கிராமத்தில் கல்வி தராதர சாஃத வரை படித்துள்ள 40பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டுமென்றும் ஊர்ப்பெரியவர் ஒருவர் கேட்டுக்கொண்டார். ஏனைய மீள்குடியேற்ற கிராமங்களைப் போன்றே இங்கும் மருத்துவ சேவை பின்தங்கியே உள்ளது. குறைந்தபட்சம் வாரம் இருமுறையாவது நடமாடும் மருத்துவசேவை இடம்பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மிகவும் முக்கியமாக டெங்கு, மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சேதமுற்றுள்ள கழிவறைகளைத் திருத்திக்கொடுக்குமாறும் மக்கள் கோருகின்றனர். குளங்களில் மாரிக்காலத்தில் மீன்குஞ்சுகளைவிட்டு நன்னீர் மீன்வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க விநியோகத்தையும் விற்பனையையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவைப்படுகின்ற எரிபொருளைச் சேமிப்பதற்கு சங்கத்திற்குரிய 2 ஏக்கர் நிலத்தில் களஞ்சியம் நிர்மானித்துத் தர வேண்டும் என்றும் அறுவடை நெல்லை கொள்முதல் செய்து களஞ்சியப்படுத்துவதற்கு கட்டடம் அவசியம் என்றும் பெரியதம்பனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் அம்பலவாணர் இராமச்சந்திரன் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டுக்கொண்டார். ஒரு சமூகசேவகரைப்போல் செயற்படும் ப.நோ.கூ.ச முகாமையாளரை கிராம மக்கள் பாராட்டினர். தற்பொழுது இக்கிராமத்தில் 275 குடும்பத்தினர் மீள்குடியேறியுள்ளனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் ரூ5,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை இன்னமும் வழங்கப்படாதுள்ளது. ஆனால் இவர்களுக்குப் பிறகு குடியேறிய அயல் கிராமத்தவர்களுக்கு ரூ25,000மும் வழங்கப்பட்டுவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்திய மக்களின் அன்பளிப்பு என்று அச்சிடப்பட்ட பெட்டியில் அடங்கியிருந்த மண்வெட்டி, காட்டுக்கத்தி, கல்வாரி போன்ற உபகரணங்கள் தரமற்றவைகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கிராம உத்தியோகத்தர் கோணேஸ்வரலிங்கத்திடமிருந்து அவற்றினை வாங்கி சிவசக்தி ஆனந்தன் பார்வையிட்டார். பாவனையின் துவக்கத்திலேயே அவைகள் உடைந்துவிடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டது. விடுபட்டுள்ள, இடம்மாறியுள்ள, மற்றும் ஊர்களுக்கு வந்துபோகும் குறியிடப்பட்ட மாடுகளைப் பிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மயானத்தைச் சீர் செய்து கொடுக்கும்படியும் பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் கேட்டுக்கொண்டனர். இவற்றுடன் தற்காலிக கொட்டில் அமைப்பதற்கும், கால்நடைகளுக்கான கொட்டில் அமைப்பதற்கும் காட்டுத்தடிகளை வெட்டுவதற்கு அனுமதி வேண்டித்தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மீள்குடியேறியவர்களில் 75குடும்பத்தினருக்கு மட்டுமே தகரமும், தடிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் எஞ்சியுள்ளவர்களுக்கு இன்னமும் அவைகள் கிடைக்கவில்லை என்றும் முறைப்பாடு செய்தனர். இக்கிராமத்தினருக்குச் சொந்தமான 3ட்ராக்டர், 12லான்ட்மாஸ்டர், தண்ணீர்ப்பம்பிகள், மோட்டார் வாகனங்கள், அருவி வெட்டும் இயந்திரம், 5சூடடிக்கும் இயந்திரம் என்பவை இடப்பெயர்வின்பொழுது வன்னியில் கைவிடப்பட்டுள்ளன. அவைகளை அரசு திரும்பவும் கையளிக்க ஆவன செய்யுமாறும் காணி மற்றும் வீடுகளுக்கு வேலி அடைப்பதற்கு கம்பி மற்றும் தடிகளைப் பெற்றுத்தருமாறும், உழவுக்கு ட்ராக்டர் (டிஸ்உடன்) நீர்ப்பம்பி மற்றும் தென்னங்கன்றுகள் என்பனவற்றைப் பெற்றுக்கொடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள், பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர் மற்றும் ப.நோ.கூ.ச முகாமையாளர் ஆகியோரின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார். அப்பொழுது அவர், 'உங்களது குறைகள் மற்றும் நெருக்கடிகளை உங்களிடமிருந்து கேட்டறிந்துள்ள நான் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஆவன அனைத்தையும் மேற்கொள்வேன் என்றும் ஜனாதிபதி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடத்தில் உங்கள் பிரச்சினைகளை முன்வைப்பேன். இந்திய அரசாங்கம் ரூ.4,25,000 மதிப்பிலான வீடுகளை நிர்மாணிக்கவுள்ளது. மீள்குடியேறியோருக்கான பணிகளை மேற்கொள்ள 32 தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருக்கின்றது. நீர்ப்பம்பிகள் வழங்குவதற்கு நிறுவனங்களின் மூலம் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் மாரிக்காலத்திற்கு முன்பாக தென்னங்கன்றுகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றேன்|| என்றும் கூறினார். பாடசாலையைச் சுற்றி வேலி அமைப்பதற்கு என்னுடைய பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதிஒதுக்கீடு செய்கின்றேன். மலசலக்கூடங்களை மாற்றியமைப்பதற்குச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்கின்றேன் என்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஏதும் இருந்தால் அதனை அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் சரிசெய்து தருகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். இடம் பெயர்ந்த 3லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் விசேட கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம். யுத்தத்தின் பின்பு அரசிடம் நிதியில்லை. வெளிநாடுகள் நிபந்தனைகளுடன் உதவி வழங்கத்தயாராக உள்ளன. இந்தியாவிற்கு இலங்கை அரசின் தலைவர்கள் சென்றுள்ளனர். அரசியல் தீர்விற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கின்றது. ஜனாதிபதியிடம் தடுப்பு முகாமிலுள்ளோருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறும் அனைவரையும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்குமாறும் கோரியுள்ளோம். அவசரக் காலச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்றும், விரைவான அரசியல் தீர்வு காணுமாறும் அரசை வெளிநாடுகள் நிர்ப்பந்திக்கின்றன. விரைவில் கட்டுப்பாடுகள் தளரலாம். இழப்பதற்கு இனி ஏதுமற்ற எமக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். உங்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்கின்றேன். உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எமது பிராந்திய அலுவலகத்தை நாடலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
|
| வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 00:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |