| அவலத்துள் வாழும் கல்மடுக் கிராமம் - வவுனியன் (பயணப்பார்வை) |
|
|
|
| புதன்கிழமை, 19 ஜனவரி 2011 01:46 |
|
கல்மடு கிராமம் 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்பொழுது 48நிரந்தர வீடுகள் இருந்ததாக ஊர்பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார். இதில் 28வீடுகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாகவும் எஞ்சிய 20வீடுகள் தமிழர்களுக்குச் சொந்தமானவையாகவும் இருந்தன. இக்கிராமத்தை ஒட்டி உவர்குளம், தணிச்சகுளம், அடம்பன்குளம், கல்மடுகுளம் என்ற பெரியகுளங்களும் ஏனைய சிறிய குளங்களும் அமைந்துள்ளன. இங்குள்ள மக்கள் கடுமையான உழைப்பாளிகள்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் இக்கிராம மக்களும் இடம்பெயர்ந்து வவுனியா கிடாச்சூரியில் இயங்கிவந்த இடைத்தங்கல் முகாமில் வசித்துவந்தனர். இக்கிராமத்தைச் சேர்ந்த 19குடும்பத்தினர் முள்ளிவாய்க்கால்வரை சென்று செட்டிகுளம் முகாமில் தங்கியிருந்து பின்னர் ஏனைய குடும்பத்தினருடன் 2010ஆம் ஆண்டு ஜூலைமாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது 133குடும்பங்களைச் சேர்ந்த 503உறுப்பினர்கள் மீள்குடியேறியுள்ளனர். இங்கு ஒரு பாடசாலை இயங்குகிறது. இப்பாடசாலையில் தரம் 1 முதல் தரம்5வரை கற்பிக்கப்படுகின்றது. தற்பொழுது இப்பாடசாலையில் 33மாணவர்கள் கல்விகற்கின்றனர். இங்கு தூயபவுல் முன்பள்ளி என்னும் ஒரு பாலர்பாடசாலையும் இயங்கிவருகின்றது. இதில் 25பிள்ளைகள் பயில்கின்றனர். இப்பாடசாலைக்கான தளபாடங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் அறிவறிப்புத்தகங்கள் என்பன தேவைப்படுவதாக இப்பாடசாலையில் ஆசிரியைகளாகப் பணிபுரியும் எம்.ஷர்மிளா மற்றும் நேசமலர் ஆகியோர் தெரிவித்தனர்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் இக்கிராமத்தைச் சேர்ந்த 3பெண்கள் தமது கணவனை இழந்துள்ளனர். தடுப்பு முகாமில் 4பேர் இருக்கின்றனர். 7பேர் காயமடைந்துள்ளனர். 2பேர் தமது அங்கங்களை இழந்துள்ளனர். முத்துலிங்கம் சுரேஸ்குமார் என்பவர் ஒருகண், ஒருகை மற்றும் ஒருகால் என்பவற்றை இழந்துள்ளார். 5ஆண்கள் காணாமல்போயுள்ளனர். ஒருபெண்மணியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள இக்கிராமத்தின் உட்கட்டுமானம் மற்றும் நிவாரண, வாழ்வாதார நடவடிக்கைகளை ACTEDஎன்னும் தொண்டு நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. ஆயினும் இந்நிறுவனத்தின் செயற்பாடுகள் திருப்திகரமாகயில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கிராம மக்களின் நீரைக்கும் பம்பிகள், டிராக்டர்கள், மற்றும் உழவு இயந்திரங்கள் ஆகியவையும் மோட்டார்வாகன சேர்வீஸ் ஸ்ரேசன் வைத்திருந்த ஒருவரது அனைத்து உபகரணங்களும் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது உழைப்பினால் கிராமத்தில் தமது போக்குவரத்திற்கான வீதியை தாமே நிர்ணயித்து, விவசாய நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் பயிரிடப்பட்ட நெற்காணிகளும் அண்மையில் பெய்த கடும் மழையினால் இம்மக்களின் வாயில் மண்ணைப்போட்டுவிட்டது. வயல்காணிகளை அண்மித்தே இவர்களது தற்காலிக மண்வீடுகளும் அமைந்திருப்பதால் வீடுகளில் நீர்ஊறி அவர்களின் வீடுகள் தங்குவதற்கே உபயோகமற்றதாக இருக்கின்றன. வடிந்தோடுகின்ற தண்ணீர் போவதற்குகாண வடிகால்வசதிகள் இல்லாததால் இவர்களின் வீட்டுத்தரைகள் மிகவும் ஈரமாக உள்ளன.
கிராம மக்கள் தங்களுக்குச் சுகாதாரமான மலசலக்கூட வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள ஒன்பதுபாதைகளின் 11கிமீ நீள சாலையை புனரமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கை விடுத்தனர். இதில் ஒரு ஆறுதலான விடயம் என்னவெனில் மீள்குடியேறிய 133குடும்பங்களில் 68குடும்பத்தினருக்கு வீடுகட்டித்தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களது காணிகளுக்கு பெர்மிட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னர் முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு விற்றுச்சென்ற காணிகளின் உறுதியை வாங்கியவர்களுக்கு மாற்றாததினால் இம்மக்கள் இப்பொழுது பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். முன்பு விற்றவர்கள் இப்பொழுது இக்காணிகளின்மீது உரிமைகோருவதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் 48குடும்பத்தினருக்கு தகரம் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய குடும்பத்தினருக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்றும் கிராமவாசிகள் தெரிவித்தனர். விதை நெல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபொழுதிலும் இறக்குக்கூலி என்று ஒவ்வொருவரிடமும் ரூ200.00 வசூலிக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்றே ஏனைய பயிர் வகைகளுக்கு ரூ100.00 வசூலிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையைச் சேர்ந்தவர்கள் இந்த கிராம மக்களிடம் உங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்றால் சாலையில் உள்ள மரங்களை வெட்டித்தாருங்கள் அப்பொழுதுதான் மின்கம்பங்களை நட்டு மின்கம்பிகளை இழுக்கமுடியும் என்று கூறுகின்றராம். ஒரு மரத்தைத் தறிப்பதற்கு குறைந்தபட்சம் ரூ4000.00 முதல் ரூ5000.00 வரை செலவாகின்றது. வருமானத்திற்கு வழிதெரியாது தவிக்கின்ற மக்கள் இப்பொழுது இந்தச் செலவை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் முழிபிதுங்கி நிற்கின்றனர். ACTED நிறுவனம் வேலைக்குக்கூலி என்னும் அடிப்படையில் இக்கிராமமக்களுக்குச் சிறிதளவு பொருளாதார உதவிகளைச் செய்துவருகிறது. இத்தகைய பணியின்கீழ் பாடசாலைக் கட்டடம் போன்ற சிறுசிறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு யுத்தம் முடிந்தபிறகு அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அப்படிச்செய்வதற்கு அரசிடம் பணம் இல்லை. யுத்தத்திற்கு ஒருநாளைக்கு 40கோடிரூபாய் செலவுசெய்த அரசிற்கு இன்று அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு செலவழிக்க பணம் இல்லை. போர்புரிவதற்கு உதவியளித்த நாடுகளும் இன்று நிதியுதவி வழங்கத் தயங்குகின்றன. அரசு பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டு அரசியல்தீர்வை வைக்கின்றேன் என்றது. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மை பலம் வந்தவுடன் அரசியல் யாப்பில் திருத்தத்தைக் கொண்டுவந்து பிரச்சினையைத் தீர்ப்பேன் என்றது. அதன்பிறகு மக்கள் எனக்கு அளித்த ஆணையின்படி என்னுள் இருக்கின்ற யோசனையின் அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பேன் என்றார் ஜனாதிபதி. இப்படி அடிக்கடி தெளிவற்ற கொள்கையினால் சலிப்படைந்த உதவிவழங்கும் நாடுகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள் அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் அதன்பிறகு அபிவிருத்திக்கான சகல உதவிகளையும் செய்கின்றோம் என்று தெரிவித்துவிட்டன. எனவே அரசாங்கத்திற்கு எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாயிற்று. அதன் அடிப்படையில் அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்தரப்பிலிருந்து மூன்று உறுப்பினர்களைக்கொண்ட குழுவினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பிலிருந்து மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் முதலாவது சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. அடுத்த சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதலாவது சந்திப்பில் மீள்குடியேற்றம், தடுப்பிலுள்ளோரது விடுதலை மற்றும் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவைகளைப் பரிசீலிப்பதாக அரசாங்கத் தரப்பும் தெரிவித்துள்ளது. எனவே நாம் நம்பிக்கையோடு எமது எதிர்காலத்தைத் திட்டமிடுவோம். எமது பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு இருக்கிறது என்று நம்பிக்கை வைப்போம். உங்களது பிரச்சினைகளை உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்று விரைவில் நிவர்த்தி செய்வதற்கு என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகள் சிலவற்றைப் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
|