Home வெளிநாட்டு செய்திகள் சிறப்புக்கட்டுரைகள் 8 சித்திரை 2010 - தமிழ் மக்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் (ஆய்வு) - கலாநிதி ஆ.க.மனோகரன்.
8 சித்திரை 2010 - தமிழ் மக்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் (ஆய்வு) - கலாநிதி ஆ.க.மனோகரன். PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 மார்ச் 2010 17:13

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் பேசும் மக்களின் நிலைமை மாறத் தொடங்கியது. இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியல் முறைமை ஆங்கிலேய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது பிரித்தானிய ஜனநாயக முறையான பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சியாளர்களாகலாம் என்பதாகும்.

இலங்கையில் சிங்களவர்கள் 74வீதமாகவும் 25வீதமானோர் தமிழ் பேசும் மக்களாகவும் இருக்கும் பொழுது, சிங்களம் பேசும் மக்கள் நிரந்தர பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் தொடர்ந்து ஆட்சியாளர்களாகவே வர வாய்ப்புள்ளது. கடந்த 62 வருடங்கள் அதைத்தான் காட்டுகின்றன. இந்த நிலையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை முறையில் பல பாதகமான முடிவுகள் இலங்கை அரசால் முன்னெடுக்கப்டுகின்றது.

அதாவது தமிழ்மக்களது பூர்வீக தாயகம் திட்டமிடப்பட்டு சிங்களவர்களால் குடியேற்றப்பட்டது. இதனால் கிழக்கு மாகாணத்தில் 40வீதம் வரை சிங்கள குடியேற்றத்துக்குள் போய்விட்டது.

அதேபோல் வடமாகாணமும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பகுதிகள் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் பின்னடைந்த பின்னர் கிளிநொச்சி, ஆனையிறவு, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு வலயப்பகுதிகள், தீவுப்பகுதிகள் சிங்களக் குடியேற்றத்துக்கான அத்திவாரங்கள் நடைபெறுவதாக அறியமுடிகின்றது.

அதேபோல தமிழ் பேசும் மக்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கள் யாவும் 62 வருடங்களாக குறைக்கப்பட்டுக் கொண்டே போகிறார்கள். தமிழ் பேசும் மக்கள் 25வீதம் வரை இருந்தாலும் அவர்களது தொழில் வாய்ப்புக்கள் 7வீதத்திற்கும் குறைவாக உள்ளதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இராணுவத்தில் 1வீதத்திற்கும் குறைவானவர்களே உள்ளனர். இன்று தமிழ் பகுதிகள் யாவும் சிங்கள இராணுவமும், சிங்கள காவல்த்துறையினரும் ஏனைய முக்கிய பதவிகளிலும் சிங்களவர்களே அமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் பகுதிகளை மேலும் சிங்கள மயமாக்கும் மறைமுக வேலைகளையே சிங்கள இராணுவ உதவியோடு மகிந்த அரசு முன்னெடுக்கின்றது.

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை 2009 வைகாசி மாதம் 18ம் திகதிக்குப் பின் வன்னி மக்கள் அனைவருமே அகதிகளாக்கப்பட்டு வவுனியாவில் பல முகாம்களில் எந்தவித வசதிகளும் இன்றி முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் ஓரளவு மக்கள் விடப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர்கள் சொந்த இடங்களில் கொட்டில்களிலும், தறப்பாள்களிலுமே வாழவேண்டிய சூழலுக்குள் விடப்பட்டுள்ளனர். அந்த மக்களை அப்படியே வைத்துக்கொண்டு மீள்குடியேற்ற வெளிநாட்டு உதவியென பல நாடுகளிலும் பணம் பெறப்பட்டு சிங்கள பகுதிக்கும், சிங்கள அரசியல் வாதிகளின் சுகபோகத்திற்குமே அவை பயன்படுத்தப்படுகின்றன.

மகிந்த அரசின் மறைமுகமான திட்டம் யாதெனில் தமிழீழப் போரை தாம் வெற்றி கொண்டதால் தமிழ் நிலம் தமக்கு சொந்தம் எனவும் அங்கு தாம் விரும்பியோரை குடியமர்த்த முடியும் என்ற போர்வையில் தமிழர்களுக்காக உலகநாடுகள் கொடுக்கும் பணத்தில் சிங்களவர்களை தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலத்தில் குடியமர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதை இன்று ஆங்காங்கே வாழும் மக்களால் உணரமுடியும். இதைத் தட்டிக்கேட்கக் கூடிய அரசியல் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும். இன்று இதைத் தோற்கடிக்க மகிந்த அரசு எல்லாவித நடவடிக்கைளும் எடுத்துள்ளது.

உதாரணமாக யாழ்.மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதாக அறிகிறோம். அரசியல் கட்சிகளில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய கட்சிகள் யாவும் மகிந்த அரசால் திட்டமிடப்பட்டு தேர்தலில் நிற்கவிடப்பட்டுள்ளன.

இதன் முக்கிய காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றி பெறுவோரைக் குறைப்பதேயாகும். அப்படிக் குறைத்தால் மகிந்தவின் மறைமுகத்திட்டமான தமிழ்ப் பகுதிகளை சிங்கள மயமாக்கலை பெரிய எதிர்ப்பின்றி செய்ய முடியும்.

இதற்கு இந்த அரசியற் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தெரிந்துகொண்டு துணை போகின்றன. இவர்கள் இப்படிச் செய்வது தம் விரல்களாலேயே தம் கண்களைக் குத்துவது போன்றதாகும்.

மகிந்த அரசுக்கு சார்பாக இருக்கும் தமிழ் கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(நாபா அணி), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஏனைய அரச சார்பான கட்சிகளும் அரசின் மறைமுகத் திட்டங்களை உணர்வதாக இல்லை.

அதேபோல சுயேட்சைகளும் அரசின் திட்டங்களை உணர்வதாய் இல்லை. இவர்கள் தமது சுயநலத்திற்காக தமிழின அழிவிற்கு துணைபோகின்றார்கள் என்றால் அது மிகையாகாது.

இவர்களைவிட தமிழ் காங்கிரசில் கேட்கும் வேட்பாளர்களும் தமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக முடியாத காரணத்தால், மறைமுகமாகவும், நேரடியாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திலும், திருமலையிலும் தேர்தலில் குதித்துள்ளனர். இவர்களும் மேலே கூறிய கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் அவ்வளவு வித்தியாசமில்லை. இவையாவுமே மகிந்தவிற்கு தமிழ் பகுதிகளை சிங்கள மயமாக்க உதவும் என்பதை உணரமுடியாத அறிவிலிகளாக உள்ளனர்.

இவர்களுக்கு பாடம் புகட்டக் கூடியவர்கள் வாக்களாப் பெருமக்களாகிய தமிழ் மக்கள். இதற்கு முதல் நடந்த தேர்தல்களில் பெருமளவு மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுதலுக்கேற்பவே வாக்களித்திருந்தனர்.

வரப்போகும் பொதுத் தேர்தலில் தமிழ் மாவட்டங்களாகிய, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் பாராமுகமாக இராது உண்மை நிலையை உணர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான கட்சிகளையும், சுயேட்சைக்குழுக்களையும் புறக்கணிக்கவேண்டும்.

எமது உரிமைக்கான போராட்டம் அகிம்சா முறையில் இருந்து ஆயுதப் போராட்டத்திற்குப் போய் இப்போ ஜனநாயக இராஜதந்திரம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதை நடைமுறைப்படுத்த உங்கள் ஒட்டு மொத்த வாக்குகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குப் போகவேண்டும்.

எனவே எமது வாக்காளப் பெருமக்களே மடை திறந்த வெள்ளமென வெளியே வந்து சித்திரை 8ம் திகதி எனது வாக்காளப் பெருமக்களே மடை திறந்தவெள்ளமென வெளியே வந்து சித்திரை 8ம் திகதி உங்கள் வாக்குகளை தமிழரசுக்கட்சியின் சின்னமான வீட்டுச்சின்னத்துக்கு நேரே போடுவீராக.

- கலாநிதி ஆ.க.மனோகரன் -

ஞாயிற்றுக்கிழமை, 28 மார்ச் 2010 02:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது