| தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்தது தவறா?- (சிறப்புப் பார்வை) - மங்களநாதன் அரவிந்தன் |
|
|
|
| ஞாயிற்றுக்கிழமை, 04 ஜூலை 2010 01:57 |
|
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவராகிய பேராசிரியர் ஒரு சாதாரண மனிதரல்ல. கல்விமானும் சகல விடங்களிலும் தெளிந்த அறிவும் தேர்ச்சியும் பெற்றவர் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. தமிழரசுக் கட்சி எப்படி வளர்க்கப்பட்டது என்பது பற்றியோ, அது தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதிலோ எவருக்கும் எந்தவிதமான சந்தேகமோ ஆட்சேபனையோ இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இது குறித்து பேராசிரியரும், அவரைப்போல இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள் ஐயப்படவோ அல்லது அச்சம் கொள்ளவோ தேவையில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றதன் பின்னணியை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. தமிழரசுக் கட்சியின் கொள்கைகளிலோ செயற்பாடுகளிலோ தமிழ் மக்களுக்கு எந்தவிதமான ஐயப்பாடுகளும் இருந்ததில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒரு கூட்டமைப்பு உருவாக வேண்டும் என்ற கட்டாய காலத்தின் தேவையை நன்கு உணர்ந்திருந்தது. அதன் காரணமாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியும் உள்ளடங்கியதாக, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பு உருவாகியது. இது அனைவரும் அறிந்ததே. தமிழரசுக் கட்சி எந்தவிதமான பாதிப்புமின்றி, அதன் தனித்துவத்தை இழக்காத நிலையில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது. செயற்பட்டது. தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது. இது எல்லோருக்கும் தெரியும். தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கத்துவம் பெற்றிருந்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சியினால் உரிய தலைமைத்துவத்தை வழங்க முடியாமல் போனதான காரணமாகத்தான் அந்தக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்புக்குள் சங்கமித்தது. அதற்காக தமிழரசுக் கட்சி அழிந்து போகவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் மிதவாத தமிழ் அரசியல் கட்சிகளும், ஆயுதமேந்திப் போராடிய தமிழ் இளைஞர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சிகளும் இணைந்து செயற்பட்டன. தேர்தல்களிலும் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றன. இது வரலாறு. இது குறித்து இங்கு விலாவாரியாக விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. தமிழர்களின் பலம் பொருந்திய அரசியல் அமைப்பாக விளங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியினால், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் போனதன் காரணமாகவே அது செயலிழந்தது. பலமிழந்து போனது. இந்தப் பின்னணியில், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பு எவ்வாறு தோற்றம் பெற்றதோ, அதேபோன்று மிதவாத தமிழ் அரசியல் கட்சிகளும், ஆயுதமேந்திப் போராடிய கட்சிகளும் இணைந்ததன் மூலம்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாகியது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே ஒரேயொரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய உடனேயே, அது தனியொரு கட்சியாகத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கென ஒரு சின்னமும் கொடியும் உருவாக்கப்பட்டன. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை. அதனால் அதற்கென ஒரு கொடியும் சின்னமும் உருவாக்கப்படவில்லை. ஆயினும் இந்தக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வடக்கு கிழக்கில் அதிகூடிய பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக, கூட்டமைப்பாகத் திகழ்ந்தது. இப்போதும் திகழ்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி செயற்பட்டபோதிலும் சரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னரும் சரி, இலங்கைத் தமிரசுக் கட்சி என்ன செய்தது? அது மௌனமாக இருந்தது. பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் கூறுவது போல, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கின்ற, அதற்கான கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கின்ற கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி திகழ்ந்தது என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. இருந்த போதிலும், அது மக்கள் மத்தியில் செயற்படத் தவறிவிட்டதை எவராலும் மறுக்க முடியாது. நல்ல கொள்கைளையும், திட்டங்களையும் கொண்டிருப்பதற்காக மட்டும் ஓர் அரசியல் கட்சி பொதுமக்களின் அபிமானத்தைப் பெற்றுவிட முடியாது. கட்சி தனது கொள்கைகள் திட்டங்களை முன்வைத்துச் செயற்பட வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப, தமிழ் மக்கள் எதிர்கொண்ட அரசியல் சவால்களுக்கு ஏற்ப இலங்கைத் தமிழரசுக் கட்சி செயற்பட்டிருந்தால், அது ஓர் உறங்கு நிலைக்குச் சென்றிருக்க மாட்டாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றதன் பின்னர், தேர்தல் திணைக்களத்திலும், தேர்தல் காலங்களில் வாக்குச் சீட்டுகளிலுமே இருந்தது. வாழ்ந்தது. இது யதார்த்தம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட உடனேயே அது ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாத காரணத்தினால், தேர்தலைச் சந்திப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தியது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே கருதப்பட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பே அந்த மக்களின் அரசியல் தலைமையாகத் திகழ்ந்தது, யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து நடத்தப்பட்ட இரண்டு தேர்தல்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருக்கின்றன. யுத்தம் முடிவடைந்து ஓரு வருடத்திற்கு மேலாகின்றது. இரண்டு தேர்தல்கள் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் என்போர், தமது கட்சியைப் புனரமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அது மட்டுமன்றி, காலத்தின் தேவை கருதி, நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களாகிய ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளிலேயே மூழ்கி இருந்தார்கள். இப்போதும் அதிலேயே மூழ்கியிருக்கின்றார்கள். அரசியல் தலைமைகளும், அரசியல் இருப்புக்களும் வாக்குச் சீட்டுக்களினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன என்ற இன்றைய அரசியல் யதார்த்தமே இதற்குக் காரணமாகும். பழமைவாய்ந்த கட்சி என்பதற்காகவோ, முதிர்ந்த அரசியல் தலைவரினால் உருவாக்கப்பட்டது, அவரால் வழிநடத்தப்பட்டது, நல்ல கொள்கைளையும், குறிக்கோள்களையும் கொண்டிருக்கின்றது என்பதற்காக ஒரு கட்சி பொதுமக்களின் செல்வாக்கையோ, ஆதரவையோ பெற்றுவிட முடியாது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள் அந்தக் கட்சியின் கொள்கைகள், குறிக்கோள்களை முன்வைத்து மக்கள் மத்தியில் செயற்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தவறிவிட்டது என்பதே உண்மை. தன்னளவில் செயற்படாத ஒரு கட்சி, மக்கள் மத்தியில் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றுள்ள ஓர் அரசியல் கூட்டமைப்பை, அல்லது அரசியல் கட்சியைப் பார்த்து, அது தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படக் கூடாது. அல்லது அவ்வாறு பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் அதுகுறித்து தங்கள் கட்சியினால் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் எனக் கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வீட்டுச் சின்னத்தை தனது சின்னமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டிருக்கின்றது என்பது பேராசிரியர் சிற்றம்பலத்தாரின் கூற்று. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள், நிலைப்பாடுகளும் இவையே என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் பற்றி சித்தாந்த ரீதியாகப் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் யதார்த்தம் என்ன தெரியுமா? இந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள மாவட்டங்கள், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள், மாவட்ட நிலையில் தமிழர் தாயகம் தானா, தமிழர் பிரதேசம் தானா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவே போராட வேண்டிய நிலையில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் திணைக்களத்தில் ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து ஆதங்கப்படுவதை விடுத்து, தமிழ் மக்களின் அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சாதுரியமாகச் செயற்படுவதற்கு முற்பட வேண்டும். இதுதான் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பேணவேண்டும். அதனைப் பாதுகாக்க வேண்டும். அதன் தனித்துவத்தை இழக்க முடியாது, அந்தக் கட்சியின் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தை வேறு எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பது போன்ற இலங்கைத் தமிழரசுக் கட்யினரின் ஆதங்கங்கள், அபிலாசைகளை எவரும் மறுக்க முடியாது. அதற்கு விரோதமாகச் செயற்படுவதற்கு எவருக்குமே உரிமை கிடையாது. ஆனால் அந்தக் கட்சி முதியவர்களின் கட்சியாக, பழைமை வாதத்தின் நிலைக்களனாக இருக்கக் கூடாது. இது மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களின் சக்தி அந்தக் கட்சியில் அதிகமாக இருக்க வேண்டும். இதற்காக அந்தக் கட்சியினர் முனைப்பாகச் செயற்பட முன்வரவேண்டும். இதுவும் காலத்தின் கட்டாயத் தேவையாகும். - மங்களநாதன் அரவிந்தன் |